இந்தியா குடிமக்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்ய பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
PMJJBY காப்பீடு திட்டம்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) இந்த திட்டம் 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம் ஆண்டிற்கு 2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவ காப்பீட்டை வழங்குகிறது. பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது பாலிசிதாரர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் நபர்கள் ஆண்டிற்கு ரூ.436 செலுத்த வேண்டும்.
இது ஆண்டு தோறும் புதுப்பிக்கப்படத்தக்கது. இந்த திட்டம் எல்ஐசி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுடன் ஒருங்கிணைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 31, 2022ம் ஆண்டின் நிலவரப்படி, காப்பீட்டாளர்களால் இதுவரை தவணைத் தொகையாக ரூ.9,737 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பயனாளிகளுக்கு அரசாங்கம் ரூ.14,144 கோடி திரும்ப செலுத்தியுள்ளது.
PMJJBY திட்டத்தின் தகுதிகள்
இத்திட்டத்தில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேரும் நபர்கள் வங்கி அல்லது தபால் நிலைய கணக்கில் ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும். பாலிசிதாரர் தனது வங்கி கணக்கில் பிரீமியம் தொகை தானாக டெபிட் ஆகும் படி ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரர் ஆண்டுதோறும் 436 ரூபாய் செலுத்துவதன் மூலம் 2 லட்சத்திற்கான டேர்ம் இன்சூரன்ஸ் காப்பீட்டை பெறுகிறார்கள். இந்த தொகையானது ஏதாவது காரணத்தினால் பாலிசிதாரர் மரணிக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் கவரேஜ் காலத்திற்கான பிரீமியம் தொகையை மே 31 அல்லது அதற்கு முன்னதாகவோ குறிப்பிடப்பட்ட தேதியில் வங்கி கணக்கில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். அதாவது பாலிசிதாரரின் கணக்கில் இருந்து ‘ஆட்டோ’ ஆப்சன் மூலமாக பிரீமியம் முறையில் பணம் கழிக்கப்படுகிறது.
PMJJBY திட்டத்தின் கீழ் ரூ. 436ல், 395 ரூபாய் காப்பீட்டாளருக்குச் செல்கிறது. அதே சமயம் ரூ. 30 முகவர் அல்லது வங்கிக்கு செலவுகளுக்காகவும், மீதமுள்ள ரூ. 11 வங்கிக்கான நிர்வாக செலவுக்காகவும் செலுத்தப்படுகிறது.
PMJJBY திட்டத்தின் கீழ் பதிவு செய்த 45 நாட்களுக்குப் பிறகு, காப்பீட்டு திட்டத்தின் கீழ் பலன் பெருவது பொருந்தும்.