பிரதமர் மோடி பாஜகவின் எட்டு ஆண்டுகால சாதனையை பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேச தயாரா ? என நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே தமிழகத்தில் யார் மூன்றாவது பெரிய கட்சி என காரசார விவாதங்கள் அதிகரித்து வருகிறது. இதனிடையே இன்று நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சி, அதிமுக, பாஜக கூட்டணி ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சீமான் சவால்
அவற்றுக்கு பதில் அளித்த சீமான், பாஜகவின் 8 ஆண்டுகால சாதனை என்பது பொதுக்கூட்டம் வைத்து அனைவருக்கும் விளக்க வேண்டிய நிலையில் மட்டுமே உள்ளது. சாதனை என்பது அனைவரும் கண்கூடாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக ஆட்சியின் சாதனை யாருக்கும் தெரியவில்லை. பாஜக ஆட்சியின் 8 ஆண்டும் மக்களுக்கு வேதனையையும், சோதனையையும் தான் அளித்துள்ளது. முடிந்தால் பாஜகவின் 8 ஆண்டுகள் ஆட்சி பற்றி செய்தியாளர் சந்திப்பு நடத்தி பிரதமர் மோடி கூற முடியுமா என்று சவால் விடுத்துள்ளார்.
பாஜக ஊழல் கட்சி
அண்மைக் காலமாக திமுக ஊழலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் ஊழலைப் பற்றி பேசும் பாஜக, ஊழல் கட்சிகளோடு ஏன் கூட்டணி வைத்துள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக செய்த ஊழல் பற்றி விமர்சிக்காமல் பாஜக கூட்டணி வைத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்த பாஜகவும் ஊழல் கட்சித் தான் என்று தெரிவித்துள்ளார்.
நாதக எதிர்க்கட்சி
மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் களத்தில் போராடி வருகிறது. தமிழக அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கு எதிராகவும் நாங்கள் தான் போராடுகிறோம். ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும் நாங்கள் தான் அறிக்கை வெளியிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
நுபுர் சர்மா சர்ச்சை
மேலும், நுபுர் சர்மா சர்ச்சை குறித்து பேசிய சீமான், நுபுர் சர்மாவின் பேச்சின் மூலம் நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் நபர்கள் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களை தேர்வு செய்யாமல் இருப்பதன் மூலம் இஸ்லாமியர்களை பாஜக புறக்கணிப்பு வெட்டவெளிச்சமாக தெரிகிறது என நெல்லையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.