பாஜகவை சேர்ந்த நவீன் ஜிண்டால், நுபுர் சர்மா ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தனர். இதனால் இஸ்லாமியர்கள் ஜார்க்கண்டில் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
சர்ச்சை கருத்து
பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால், பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா ஆகியோர் இஸ்லாமிய இறை தூதுவர் என்று கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்கள். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு செய்தி தொடர்பாளர் பொது இடத்தில் இப்படி பேசியதை பலரும் கடுமையாக கண்டித்து வந்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் தலையிட்டு இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனால் தவறான கருத்துகளை எதுவும் தாங்கள் பேசவில்லை என்று நுபுர் சர்மா, நவீன் ஜிந்தால் இருவரும் மறுத்தனர்.
கண்டன ஆர்பாட்டம்
இதனைதொடர்ந்து பாஜகவில் இருந்து நுபுர் சர்மா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை தொடர்ந்து நவீன் ஜிண்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இருப்பினும் நபிகள் குறித்து தரக்குறைவாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ உள்பட பல நகரங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்திலும், கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட்டில் போராட்டம்
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தை கலைக்க போலீசர் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றார்கள். இதனால் அங்கு கலவரம் தொடங்கியது. தலைநகர் ராஞ்சியில் போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினார்கள். மேலும், கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறையினர்கள் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள்.
இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தலைநகர் ராஞ்சியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

