சமூகம்தமிழ்நாடு

சிரிப்பதா ? அழுவதா ? மூன்று வேளை உணவிற்காக சிறைக்கு செல்ல விரும்பும் நபர் !

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று அந்த நபர் சொன்னதை கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

சிறைச்சாலை

உலகில் எவ்வளவு பெரிய குற்றவாளிகளாக இருந்தாலும் சிறை என்றதும் தெறித்து ஓடுவார்கள். இதனாலேயே தவறு செய்தவர்கள் அதை ஒப்புக்கொள்ள தயங்குவார்கள். சிறைக்கு செல்ல யாருதான் விரும்புவார்கள். ஆனால் இங்கே ஒருவர் சிறை என்றதும் சந்தோஷமாக சென்றுள்ளார். அங்கு மூன்று வேளை உணவு தடையின்றி கிடைக்கும் என்பதற்காக.

Police Station

செயின் பறிப்பு

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் வசித்து வருபவர் மூதாட்டி ராதிகா. 70 வயதான இவர் நேற்று இரவு தனது வீட்டில் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். மூதாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்தனர்.

விசாரணை

இதனிடையே காவல்துறையினர் அந்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர் வந்தவாசியைச் சேர்ந்த மோகன்குமார் என்பது தெரிய வந்தது. மேலும், 37 வயதான அவர் கூறியதாவது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஊரடங்கு என்பதால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

SP office

வாக்குமூலம்

சாலையோரம் தஞ்சமடைந்த எனக்கு தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூன்று வேளையும் உணவளித்து வந்தனர். மூன்று வேளையும் உணவு கிடைத்ததால் வேலைக்கு போகும் சிந்தனையே எழவில்லை. கடந்த சில மாதங்களாக உணவு ஏதும் கிடைக்காத நிலையில், உணவு தேடி பல இடங்களில் அலைந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சிட்லபாக்கத்தில் வீடு திறந்து இருப்பதைக் கண்டேன். அங்கு பாட்டியின் கழுத்தில் தங்கச்சங்கிலியை பார்த்ததும் தங்கச்சங்கிலியை அறுத்து அதை விற்றால் பல மாதங்களுக்கு பசியாற்றி கொள்ளலாம் என்று தோன்றியது. அதனால் தான் செயினை திருட முயன்றேன். இவ்வாறு அந்த நபர் கூறினார்.

உணவு கிடைக்குமா ?

இதனையடுத்து காவல்துறையினர் மோகன குமாரிடம் அந்த 4 சவரன் செயினை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோகன குமார் சிறைக்குச் செல்வதற்கு முன்பு சிறையில் மூன்று வேளை உணவு கிடைக்குமா ? மூன்று வேளை உணவு கொடுத்தால் சிறைக்கு செல்ல தயார் என்று போலீசாரிடம் மோகன குமார் கூறியிருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதற்கு சிரிப்பதா அழுவதா என்று திணறி நின்றனர்.

Related posts