இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கிரீமிலேயர் பிரிவை, பெற்றோரின் சம்பளத்தை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அவர்கள் கிரீமிலேயர் வரம்பில் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ஓபிசி சமூகத்தை சேர்ந்த சில மாணவர்கள் கிரீமிலேயர் வரம்பில் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்த்து அவர்கள், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் முறையிட்டிருந்தனர். பல மாணவர்களின் வருமானம் மற்றும் அவர்களின் பெற்றோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து, மாணவர்களில் சிலர், சென்னை, டெல்லி மற்றும் கேரளாவில் உள்ள உயர்நீதிமன்றங்களிலும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெற்றோரின் வருமானத்துடன் அவர்கள் வகிக்கும் பதவியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு கடந்த 1993ல் குறிப்பாணை வெளியிட்டுள்ளது என்று மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதேசமயம், அரசு பதவியையும், பொதுத் துறை நிறுவனங்களின் பதவியையும் சமமாக கருத முடியாது என்று அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றங்கள், மாணவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன.
இதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவர்களை தவறுதலாக கிரீமிலேயர் வரம்பில் சேர்த்துவிட்டதாக கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மாணவர்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே வைத்து, கிரீமிலேயர் வரம்பை தீர்மானிக்க முடியாது என்றும் அவர்கள் தீர்ப்பளித்தனர்.

