நீதிமன்றம் விதித்த ரூ.2.27 கோடி அபாரதத்தை ஏப்ரல் 20-க்குள் செலுத்தாவிட்டால், ஏற்கெனவே விதித்த 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று கோச்சடையான் திரைப்பட தயாரிப்பு நிறுவன இயக்குநரை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் க்ளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், பட வெளியீட்டுக்காக ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக வாங்கியிருந்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், மீடியா ஒன் க்ளோபல் நிறுவனம், 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, பணம் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு மீடியா ஒன் க்ளோபல் நிறுவனம் வங்கிக்கு கடிதம் அனுப்பியிருந்து. இதனால், ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, மீடியா ஒன் க்ளோபல் நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் முரளி மனோகர் மீதும், ஆட் பியூரோ அட்வர்டைசிங் நிறுவன உரிமையாளர் அபிர்சந்த் நஹர், காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளம் நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. அத்துடன் 7 கோடியே 70 லட்சம் ரூபாயை வட்டியுடன் அபிர்சந்த் நஹருக்கு வழங்கும்படி முரளி மனோகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, முரளி மனோகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முரளி மனோகருக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. அத்துடன் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. மேலும், 2 கோடியே 52 லட்ச ரூபாய் அபராதத்தை 8 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றும் முரளி மனோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரியும், அபராதத்தை செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கக் கோரியும் மீடியா ஒன் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், அபராதத் தொகை தொகை 2 கோடியே 52 லட்ச ரூபாயில், 25 லட்ச ரூபாய் ஏற்கெனவே செலுத்தப்பட்டு விட்டதால், மீதமுள்ள 2 கோடியே 27 லட்ச ரூபாயில், 1 கோடி ரூபாயை மார்ச் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள 1 கோடியே 27 லட்ச ரூபாயை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த தவறினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட 6 சிறை தண்டனையை முரளி மனோகர் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதபதி தெரிவித்துள்ளார்.

