‘ஹலா’ என்றால் ‘ஏர் கலப்பை’ என்று பொருள். இவ்வாசனத்தில் உடல் ஏர் கலப்பை வடிவில் இருப்பதால் இப்பெயர் பெறுகிறது. இது ஆங்கிலத்தில் Plough Pose என்று அழைக்கப்படுகிறது.
ஹலாசனம் பயில்வதால் மணிப்பூரகம், அனாகதம் மற்றும் விசுத்தி சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்க்கும் திறன் வளர்கிறது; அன்பு, பரிவு போன்ற குணங்கள் மேலோங்குகின்றன.
தொடர்பாடல் திறனும், தன் கருத்துக்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறனும் வளர்கின்றன; அமைதியான மனநிலையை உருவாக்கும் எண்ணங்கள் வளர்கின்றன.
ஹலாசனத்தின் மேலும் சில பலன்கள் :
முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்வதோடு, அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து பலமடையவும் செய்கிறது.
முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது
முதுகுவலியைப் போக்க உதவுகிறது
நுரையீரலைப் பலப்படுத்துகிறது
ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளைச் சரி செய்கிறது
தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது
இளமையான தோற்றத்தைத் தருகிறது
ஆற்றலை அதிகரிக்கிறது
வயிற்று உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது
தொப்பையைக் கரைக்கிறது
இடுப்பு மற்றும் தொடையில் உள்ள அதிக சதையைக் கரைக்கிறது
உடலின் நெகிழுவுத்தன்மையை அதிகரிக்கிறது
உடல் முழுவதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது
தலைவலியைப் போக்குகிறது
தூக்கமின்மையை சரி செய்கிறது
கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது
குழந்தையின்மை குறைப்பாட்டை சரி செய்கிறது
கால்களைப் பலப்படுத்துகிறது
மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது
உடல் சோர்வைப் போக்குகிறது
நினைவாற்றலை அதிகரிக்கிறது
கவனத்தைக் கூர்மையாக்குகிறது
மன அழுத்தத்தைப் போக்குகிறது
செய்முறை :
விரிப்பில் கால்களை நீட்டி படுக்கவும்.
கைகளை உடலுக்கு அருகில் தரையில் வைக்கவும்.
மூச்சை வெளியேற்றியவாறு கால்களை மேல் நோக்கி உயர்த்தவும்.
புட்டத்தை உள்ளங்கைகளால் தாங்கியவாறு கழுத்திலிருந்து கால்வரை ஒரே நேர்க்கோட்டில் இடுப்புக்கு நேராக நிறுத்தவும்.
மூச்சை உள்ளிழுக்கவும்.
மூச்சை வெளியேற்றியவாறு முட்டியை மடக்காமல் கால்களை முகத்துக்குப் பின்னால் கொண்டு சென்று தரையில் வைக்கவும்.
இப்பொழுது உங்கள் முதுகு நேராக இருக்கும். மார்பும் முகவாயும் இணைந்தவாறு இருக்கும்.
உள்ளங்கைகள் முதுகைத் தாங்கி இருக்கலாம்.
அல்லது கைகளைத் தரையில் நீட்டி இரண்டு கை விரல்களை இணைத்தும் வைக்கலாம்.
துவக்கத்தில் 30 வினாடிகள் இந்நிலையில் இருக்கவும்.
பழகப் பழக நேரத்தை அதிகரித்து 5 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம்.
குறிப்பு :
கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் தீவிரப் பிரச்சினை உள்ளவர்கள் ஹலாசனம் செய்வதைத் தவிர்க்கவும்.
கால்களைத் தலைக்குப் பின்னால் தரையில் வைக்க முடியவில்லையென்றால், தலைக்குப் பின்னால் yoga block ஒன்றை வைத்து அதன் மேல் காலை வைக்கவும். அல்லது, சுவற்றிற்கு முன்னால் தலை வைத்துப் படுத்து, கால்களை சுவரின் மீது வைத்துப் பழகவும்.
கால்களைப் பின்னால் வைக்கும்போது கழுத்துப் பகுதியில் வலி ஏற்பட்டால், கழுத்து மற்றும் தோள்களுக்கு அடியில் மடித்த கம்பளத்தை வைத்துப் பழகவும்.