தனுராசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் முதுகுத் தண்டின் ஆரோக்கியத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கலாம். தனுராசனம் ஆங்கிலத்தில் Bow Pose என்று அழைக்கப்படுகிறது.
தனுராசனத்தின் மேலும் சில பலன்கள் :
நுரையீரலை பலப்படுத்தி மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
வயிற்றில் உள்ள அதிகக் கொழுப்பைக் கரைக்கிறது.
வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
சீரணத்தை பலப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது.
நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது.
முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
கூன் முதுகை நிமிர்த்த உதவுகிறது.
சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
உடல், மனச் சோர்வைப் போக்குகிறது.
செய்முறை :
விரிப்பில் குப்புறப் படுக்கவும்.
கால்களை மடித்து கைகளால் கணுக்கால்களைப் பிடிக்கவும்.
கைகளால் கால்களை மேல் நோக்கி உயர்த்தவும்; அதே நேரத்தில், மார்பையும் உயர்த்தவும்.
உங்கள் அடி வயிற்றுப் பகுதி மட்டுமே தரையில் இருக்க வேண்டும். இப்போது உங்கள் உடல் வில் வடிவத்தில் இருக்கும்.
30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் கை, கால்களைத் தளர்த்தி பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு :
கால்களைத் தூக்க முடியவில்லை என்றால், தொடைகளுக்கு அடியில் தலையணை அல்லது yoga block-ஐ வைத்து பயிலவும்.
கழுத்து, தோள், முதுகு, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் தீவிர வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் பயில்வதைத் தவிர்க்கவும். குடலிறக்கம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.