ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா ? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பொன்னையன் பதிலளித்துள்ளார்.
உறுப்பினர்களுக்கு அழைப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதன்தொடர்ச்சியாக அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சென்னையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அந்த போஸ்டர்களை கிழித்ததாக கூறப்பட்டது. அதனால் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஆலோசனை
இதனையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த சூழலில் தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தம்பி துரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
இந்நிலையில், ஒற்றை தலைமை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘ஒற்றைத் தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என்று எனக்கே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை குறித்து பேட்டி அளித்ததால் இந்த பிரச்சனை உருவாகியுள்ளது’ என்று பதிலளித்தார்.
ஜெயக்குமார் மீது நடவடிக்கை
ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கட்சி தகுந்த நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்பட்டது. இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஆலோசானை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒற்றைத் தலைமை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியதற்காக ஜெயக்குமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உண்மை இல்லை.
பொன்னையன் விளக்கம்
ஒற்றைத் தலைமை தேவையா என்பது குறித்து பொதுக்குழு தான் முடிவு செய்யும். மேலும், ஆயிரம் சதவீதம் பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெறும். எல்லா கட்சியிலும் பிரச்சனைகள் எழுவது இயல்புதான். ஒற்றைத் தலைமை கோரிக்கையை தவறு என்று சொல்ல முடியாது’ என்று பொன்னையன் கூறினார்.