கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23ம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்பெயரில் கூட்டத்தில் கொண்டு வரும் தீர்மானங்கள் குறித்து சென்னையில் கடந்த 14ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ராஜன் செல்லப்பா கருத்து
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று கூறினார். மேலும், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தூக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக வருகிற ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக ஓபிஎஸ் கட்சியில் இருந்து விலகவேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வளர்மதி பேச்சு
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கமே திமுகவை வீழ்த்துவது தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சிறப்பாக ஆட்சியை நடத்தியவர் இபிஎஸ். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக, இபிஎஸ் வர வேண்டும். அதுவே எங்களது விருப்பமும் தொண்டர்களின் விருப்பமுமாக உள்ளது. திமுக அமைச்சர்களை சட்டசபை கூட்டத்தொடரில் ஓபிஎஸ் பாராட்டி பேசுகிறார். அவரும் அவரது மகனும் திமுகவோடு உறவு வைத்துள்ளனர்.

ஓபிஎஸ், அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதற்கு காரணமே இரட்டை தலைமைதான். பாஜகவுடன் நெருக்கமாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பாஜகவில் இணைவார்’ என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.

