கொரோனா தொற்று பரவலின் காரணமாக நெல்லையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் மாநிலத்தின் புதிய தொற்று பாதிப்புகள் 1,461ஆக உயர்ந்தன. நேற்றைய தினம் 1,484ஆக அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், கோவையில் 70 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், 736 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 8,970 பேர் கொரோனா நோயாளிகளாக இருக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 195ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டம்
கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அறிவிப்பு
அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல் பேருந்துகளில் அனைவரும் முகக்கவசம் அணிவதை நடத்துனர் கண்காணிக்க வேண்டும். மேலும் கடைகள், திரையரங்குகள் உட்பட அனைத்து பொது இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கட்டுப்பாடுகள்
தொற்றை கட்டுப்படுத்தும் ஆயுதமாக தடுப்பூசி விளங்குகிறது. எனவே அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எல்லா நேரங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


