இந்தியாவில் மீண்டும் மத கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி பேசியவர்களை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியும் கலந்துக்கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, ‘பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் மீண்டும் ஒரு மத கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது மிகப்பெரிய மத கலவரத்தை உருவாக்கினார். இதில் 2,000 பேர் கொல்லப்பட்டார்கள் அந்த 2,000 பேரும் இஸ்லாமியர்கள் தான். அதற்கு காரணம் யார் என்பது தெரியாமல் போய்விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். நம் நாட்டில் ஏறக்குறைய 35 கோடி சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள், 25 கோடி தலித்துகள் இருக்கிறார்கள் அவர்கள் இல்லாமல் இந்தியாவை ஆட்சி செய்துவிட முடியுமா ? ‘ என கேள்வி எழுப்பினார்.
பாஜக மீது தாக்கு
தொடர்ந்து பேசிய அவர்,’ ஆனால் இன்று ஆளும் அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இறைவழிபாடு என்பது எப்படி சாத்தியமாகும். பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு தேசம்தான் இந்தியா. பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் முகமது நபியை விமர்சித்திருக்கிறார் அந்த மதத்தைச் சாராத ஒருவர் எப்படி விமர்சிக்கலாம். அப்படி விமர்சித்தால் கலவரம்தானே ஏற்படும் என கூறினார்.
அதிமுக குறித்த கருத்து
அதிமுக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர், அதிமுகவானது பாஜகவின் அடிமை கட்சியாக மாறிவிட்டது. அதிமுகவில் யார் முதல்வர், துணை முதல்வர் என்பதையே பாஜக தான் தீர்மானிக்கிறது என்கிற போது அவர்களின் இழிநிலைக்கு வேறு என்ன காரணத்தை நாம் சொல்ல முடியும் என்றும் கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.