குன்றத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொன்ற கணவர்.
மனைவி மீது சந்தேகம்
சென்னை குன்றத்தூர் அடுத்த காலடிபேட்டையைச் சேர்ந்த ரமேஷ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரமேஷின் மனைவி அலமேலு முன்னாள் பள்ளி ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

ரமேஷ் அலமேலு மீது அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். ரமேஷ் சண்டையிட்டு வந்ததால் அலமேலு ஒரு வாரத்துக்கு முன் அயனாவரத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றுவிட்டார். ரமேஷ் அங்கிருந்து அலமேலுவை சமாதானம் செய்து நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
கடப்பாரையால் அடித்து கொலை
ஆனால் ரமேஷ்க்கு அலமேலுவின் மீது இருந்த சந்தேகம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று மகள்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்ற நேரத்தில் ரமேஷ்க்கும் அலமேலுவிற்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ரமேஷ் வீட்டில் இருந்த கடப்பாரையால் அலமேலுவின் உடலில் பல பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் அதிகமான ரத்தம் அலமேலு உடம்பில் இருந்து வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ரமேஷ் நேராக குன்றத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னுடைய மனைவியை அடித்தே கொலை செய்து விட்டதாகக் கூறி சரண் அடைந்தார்.
சரண் அடைந்தார்
இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார் தரப்பில் கூறும்போது, ‘ரமேஷ் தனது மனைவியின் மீதான சந்தேகத்தால் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. மனைவி மீது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

