தன்னை திருமணம் செய்துகொள்ள சொன்ன இளம்பெண்ணை கொலை செய்த காதலனுக்கு பழங்குடியின சிறப்பு நீதிமன்றம் ஆயுள் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் ஏமாற்றம்
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, கரட்டுப்பட்டியை சேர்ந்த அன்னக்கொடியின் மகன் லோகிதாசன். 24 வயதான இவர் ஒரு கூலித்தொழிலாளி. அந்த ஊருக்கு அருகில் அமைந்துள்ள கோவில்பட்டியை சேர்ந்த கருப்பையாவின் மகள் ஜெயப்பிரதா. இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணிடம் பழகி வந்தார் லோகிதாசன். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகிதாசனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
படுகொலை
இதனால் செய்வதறியாத ஜெயப்பிரதா வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றால், மணப்பெண்ணின் வீட்டில் காதல் விவகாரத்தை கூறி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த இளைஞர் ஆத்திரமடைந்தார். மேலும், ஜெயப்பிரதாவை ஆண்டிபட்டியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அருகே இருக்கும் ஒரு காலி இடத்திற்கு அழைத்துச் சென்று லோகிதாசன் அவரை படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.
ஆயுள் தண்டனை
உயிரிழந்த ஜெயப்பிரதா பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த இளைஞர் லோகிதாசன் மீது எஸ்.சி.எஸ்.டி வண்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பெயரில் ஆண்டிபட்டி காவல்துறையினர் லோகிதாசனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தேனி மாவட்ட பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கொலை செய்த லோகிதாசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சாந்திசெழியன் உத்தரவிட்டார்.