சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு கூடுதலான வசதிகளை செய்து கொடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை
சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்களிடம் மெட்ரோ ரயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கையில், மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களின் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில் தற்போது கணிசமாக அதிகரித்து உயர்ந்துள்ளது.
1.3 லட்சம் பயணிகள்
சென்னை மெட்ரோ ரயில் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் நாள் ஒன்றுக்கு 81,000 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்து வந்தனர். பிப்ரவரி மாதத்தில் 1.13 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 1.51 லட்சம் பேரும், மே மாதத்தில் 1.59 லட்சம் பேரும் பயணித்துள்ளனர். பொதுவாக வார விடுமுறை நாட்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவான பயணிகள் வருகை தந்த நிலையில் தற்போது 1.3 லட்சம் வரை மெட்ரோ ரயிலில் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
சிற்றுந்து பேருந்து
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே 6 வழித்தடங்களில் 12 சிற்றுந்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனை விரிவுபடுத்தும் விதமாக மேலும் 5 வழித்தடங்களில் 10 சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய வழித்தடம்
அதன்படி அரசினர் தோட்டம் மெட்ரோ முதல் தலைமை செயலகம், கிண்டி மெட்ரோ முதல் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம், சின்னமலை மெட்ரோ முதல் தரமணி, செனாய் நகர் மெட்ரோ முதல் தி.நகர் பேருந்து நிலையம், விமானம் நிலையம் மெட்ரோ முதல் தாம்பரம் மேற்கு ஆகிய 5 வழித்தடங்களில் தலா 2 சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து சிற்றுந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது.
ரயில் சேவை நேரம்
மேலும், மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கு முதல் இரவு 11 வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வார நாட்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். நெரிசல் மிகுந்த நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஓன்று என மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.