சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூபாய் 1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் நேற்று தொடங்கி வைத்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நவீன வசதிகள்
ரூ.2.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மார்பக புற்று நோய் கண்டறியும் நவீன உபகரணம், ரூ. 25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு அறுவை சிகிச்சை அரங்கம், ரூ.75 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம் ஆகியவற்றை கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலாஜி தலைமையில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
முழு உடல் பரிசோதனை
அப்போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியம், ‘வட சென்னையில் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளியமக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் நலன் காக்கும் வகையில் ரூபாய் 1000 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மிக குறைந்த கட்டணத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, தைராய்டு, சீறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க இந்த மையம் ஏதுவாக அமையும்.
நவீன நூலகம்
மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும் இந்த திட்டத்தை அனைத்து மருத்துவனை மருத்துவ கல்லூரிகளிலும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதிகமாக காணப்படும் மார்பக புற்றுநோய் கண்டறியும் அதிநவீன கருவி ரூ.2.50 கோடி செலவில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் ரூ.75 லட்சம் செலவில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட நூலகம் அமைக்கப்பட்ட உள்ளது.
ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றுவது ஒவ்வொரு மருத்துவர்களின் ஆத்மாத்த விருப்பமாக உள்ளது. இங்கு பணியாற்றி ஒய்வு பெற உள்ள மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஒய்வு காலத்தை கழித்திட வாழ்த்துகிறேன்’ என அமைச்சர் மா. சுப்பிரமணியம் உரையாற்றினார்.