காங்கிரஸ் நேற்று வெளியிட்ட மாநிலங்களவை தேர்தலின் வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததை குறித்து பிரபல நடிகை நக்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை நக்மா
ஷங்கர் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நக்மா. அதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன்இணைந்து நடித்தார். இதனால் தமிழில் பிரபலமான இவர் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.
அரசியல் பிரவேசம்
இந்நிலையில், திடீரென 2004ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார் நடிகை நக்மா. திருமணம் கூட செய்து கொள்ளாமல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். கட்சி பணி செய்தல், தேர்தல் பிரசாரம் என்று பல பணிகளை செய்தார். இதன்மூலம் மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி பெற்றார் நக்மா.
மாநிலங்களவை தேர்தல்
இதனால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் நடிகை நக்மா. இதனிடையே காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அதற்கு மே 24ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
SoniaJi our Congress president had personally committed to accommodating me in RS in 2003/04 whn I joined Congressparty on her behest we weren’t in power thn.Since then it’s been 18Yrs they dint find an opportunity Mr Imran is accommodated in RS frm Maha I ask am I less deserving
— Nagma (@nagma_morarji) May 30, 2022
வேட்பாளர்கள் பட்டியல்
நாளையுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடையும் நிலையில் நேற்று காங்கிரஸ், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் பட்டியலை அறிவித்தது. அதில் மகாராஷ்டிராவில் இருந்து இம்ரான் பிரதாப்கரியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியடைந்த நக்மா தனது வருத்தத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நக்மா வருத்தம்
அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , 2004ல் என்னை காங்கிரஸில் சேர்த்துக் கொள்ளும்போது எம்.பி. பதவி கொடுக்கப்படும் என்று எனக்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்தார். அதன்பிறகு 18 வருடங்கள் ஆகியும் எனக்கு ஒரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. ஆனால் திரு இம்ரான்க்கு மகாராஷ்டிராவில் இடமளிக்கப்படுகிறது, எனக்கு அந்த தகுதி இல்லையா? என்று நக்மா தனது வருத்தத்தை கூறியுள்ளார்.