தமிழ்நாடு

வரலாற்றில் பேசக்கூடிய அளவுக்கு திமுக பெண்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை சாதனைகளை செய்துள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்!

பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திமுக ஆட்சியில் தான் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வரும்’ என கூறினார்.

A++ தகுதி

சென்னையில் உள்ள எஸ்ஐடி கல்லூரிக்கு தேசிய தர நிர்ணய குழுவால் A++ தகுதி வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் ‘சென்னையில் ஆண்களுக்கென பல கல்லூரிகள் இருந்தாலும், பெண்களுக்கென ஒரு தனி கல்லூரி வேண்டும் என்பதற்காக தொடங்கபட்டதுதான் இந்த கல்லூரி.

இந்த கல்லூரிக்கு A++ தகுதி கொடுக்கப்பட்டுள்ளது கல்லூரியின் வெற்றி பாதைக்கு மையக்கல்லாக அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு மறைந்த நீதிபதி பஷீர் அகமத்தின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் வெற்றி.

நான் முதல்வன்

திறன்மிக்க கல்லூரி மாணவ மாணவியரை உருவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் அறிவிக்கப்பட்டு எவ்வாறு செயல்படுகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி, திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கின்றதோ அப்போதெல்லாம் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள் மற்றும் சாதனைகள் அறிவிக்கப்பட்டு, இன்று வரலாறு பேசக்கூடிய அளவுக்கு அவை செயல்பட்டு வருகின்றன.

உதாரணமாக, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம், வேலைவாய்ப்பில் 30 சதவீத இட ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஆரம்பப் பள்ளிகளில் பெண்களைத்தான் கட்டாயமாக ஆசிரியராக நியமிக்கும் சட்டம் இப்படி பல திட்டங்களை சொல்ல முடியும்.

மாதம் ரூ.1000 நிதி உதவி

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான், மகளிர் சுய உதவிக்குழுவை மறைந்த முதல்வர் மு.கருணாநிதி கொண்டுவந்தார். அதேபோன்று, பெண்களுக்கு கல்லூரி கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 நிதி உதவியாக வழங்கும் திட்டத்தை அறிவித்து அதை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழக அரசை போல இந்த கல்லூரியும் பெண்களின் கல்வி உரிமைக்காக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருவது பாராட்டுதலுக்குரியது’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related posts