ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவுக்கு பதிலாக மாற்று ஏற்பாட்டை தமிழக அரசு செய்துவருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்புதுறை அமைச்சர் சக்கரபாணி
சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார் உணவு பாதுகாப்புதுறை அமைச்சர் சக்கரபாணி. அப்போது செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
செய்தியாளர்கள் சந்திப்பு
அதிலும் குறிப்பாக செய்தியாளர்களில் ஒருவர், ‘ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை என்ன ?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய அமைச்சர், ‘தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருட்கள் வழங்கல் குற்றப்புனலாய்வுதுறை அதிகாரிகளிடமும் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக’ கூறினார்.
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக கூடுதலாக இரண்டு டிஜிபிக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிமை பொருள் குற்றபுனலாய்வுதுறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் நடவடிக்கை
பின்னர் சேமிப்பு கிடங்குகளில் மழையால் மூட்டைகள் அனைத்தும் சேதம் அடைவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழகம் முழுவதும் திறந்தவெளியில் உள்ள சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகள் மழையால் சேதம் அடையாமல் இருக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 286 குடிமைப்பொருள் குடோன்கலிருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள், அரிசி மூட்டைகளுக்கும் குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். இதன் மூலம் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என கூறினார்.
கருவிழி ரேஷன் பதிவு
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக மின்னணு பதிவேட்டில் அவ்வப்போது இணைய கோளாறுகள் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக எதுவும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் சாத்தியமானால் அனைத்து ரேஷன் கடைகளிலும் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.