கல்விதமிழ்நாடு

இன்றுடன் முடிவடைகிறது 10ம் வகுப்பு பொது தேர்வுகள் !

2021-2022ன் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மே 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வோடு பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது.

அனைவரும் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கல்வியாண்டில் பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்புகள் வெளியாகின.

பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். பொது தேர்வின் போது ஆள்மாறாட்ட செயல்களில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

தேர்வுகள் தொடக்கம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 தொடங்கி மே 30 முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதுகாப்புடன் மே 6ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கின.

இன்றுடன் நிறைவு

கடந்த மே 6 ஆம் தேதி மொழித்தாள் பாடமும், 18 ஆம் தேதி ஆங்கில தாளும், 21 ஆம் தேதி தொழில்முறை பாடமும், 24 ஆம் தேதி கணிதமும், 26 ஆம் தேதி அறிவியலும் நடைபெற்ற நிலையில் இன்று இறுதி நாளான 30 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வோடு இன்றுடன் பொது தேர்வுகள் முடிவடைகிறது.

இதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

 

Related posts