தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணமின்றி கைகளால் கழிவுகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்!

மதுரையில் தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு சாதனம் எதுவும் இன்றி கழிவுகளை அகற்றிய புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாஸ் கிளினிங்

மதுரை மாநகராட்சி 59 ஆவது வார்டுக்கு உட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நேற்று முன்தினம் காலையில் மாஸ் கிளினிங் நிகழ்ச்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திரா ராணி தொடங்கி வைத்தார். அப்போது சாலையின் நடுவே இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென இந்திரா ராணி அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

அப்போது, மேயர் இந்திரா ராணி, திமுக கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். இதனை தொடர்ந்து, பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்வதும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

பல தரப்பினர் கண்டனம்

இந்த புகைப்படம் வெளியான நிலையில், மேயர் முன்பாகவே தூய்மை பணியாளர்கள் கையில் கையுறை, காலில் செருப்பு, முகக்கவசம் எதுவும் இல்லாமல் கழிவுகளை அகற்றுவதை கண்டு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அவல நிலையை தொடர்ந்து வழக்கறிஞர் முத்துக்குமார், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் மீது புகார் மனு அளித்தார்.

அறிக்கை

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திரா ராணி விளக்கம் அளித்ததாவது, ‘நேற்று முன் தினம் காலை மண்டலம் 3 வார்டு எண் 59ல் ரயில்வே காலனி பகுதியில் சிறப்பு தூய்மை பணியினை துவக்கி வைத்து பணிகளை பார்வையிட்ட போது டெசில்டிங் இயந்திரத்தை இயக்கும் தூய்மை பணியாளர் கையுறை, காலணி, பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததை கவனித்து, அவரிடம் பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி செய்ய வேண்டுமென வலியுறுத்தினேன்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இதனை, உடனடியாக விசாரித்து பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் இருந்ததற்கான தக்க விளக்கத்தை அளிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலகர்களிடம் கேட்கப்பட்டு உள்ளது. அனைத்து தூய்மை பணியாளர்களும் தகுந்த உபகரணங்களை அணிந்து பாதுகாப்புடன் செயல்பட வேண்டும். மேலும், மண்டல உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், சுகாதார அலுவலகர் மற்றும் வார்டு உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் இதை பற்றிய போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

மீண்டும் இவ்வாறான கவனக்குறைவான செயல் நேர்ந்தால் சம்மந்தப்பட்ட அலுவலகர்கள் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராராணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related posts