ஸ்டெர்லைட் ஆலையில் பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத பசுமை தாமிர ஆலை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை தாமிரம் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வேதாந்தா நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை கடந்த ஜனவரி 27ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “தங்கள் தரப்பு சார்பில் பதிலளிக்க அவகாசம் அளிக்காமல் அவசர கதியில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பசுமை தாமிரம் உற்பத்தி செய்வதால் 15 முதல் 25% வரை கசடுகள் குறைக்கப்படும். தாமிர உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் அபாயகரமான கழிவுகள் 40% குறையும். பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் 34% குறைக்கப்படும் என்ற அறிவியல் ரீதியாக கோரிக்கையை பரிசீலிக்காமல், தாமிர உற்பத்தி என்பதால் தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலின் படி பசுமை தாமிர உற்பத்தி ஆலையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம் ஶ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில், “கோரிக்கையை நிராகரிப்பதாக இருந்தால் உரிய அவகாசம் அளித்து விளக்கத்தை கேட்டு கோரிக்கையை நிராகரிக்கலாம். தங்கள் தரப்புக்கு வாய்ப்பு கொடுத்து, அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம். அரசு கூறும் அனைத்தையைம் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், “வேதாந்தா கோரிக்கையை இயந்திரத்தனமாக நிராகரிக்கப் படவில்லை. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதால் தான் நிராகரிக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? விதிமீறல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது எந்த அடிப்படையில் மீண்டும் தாமிர உற்பத்தி செய்ய வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். ஏற்கனவே ஆலையை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் திறப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர் அணுக வேண்டும்” என்றனர்.
தொடர்ந்து, விதிகளின் படி கோரிக்கையை ஏன் அரசு பரிசீலனை செய்யவில்லை. பாதிப்புகள் இல்லாத வகையில் தாமிரம் தயாரிப்பதாக இருந்தால் அனுமதி தரலாமா? என அரசு விளக்கமளிக்க வேண்டும். தொழில் நுட்பத்துக்கு ஏற்ப எப்படி தாமிர உற்பத்தி முறையை மாற்றிப்போகிறார்கள் என்பதை ஆய்வு செய்யலாமே? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிபுணர் குழு அமைப்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 26ம் தேதி ஒத்திவைத்தனர்.

