வரதட்சணை கேட்டு தகராறு செய்ததால் மணமகள் கோலத்துடன் நேரடியாக காவல் நிலையம் சென்று மணமகன் வீட்டார் மீது புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் அருகில் உள்ள தேவாரா என்ற கிராமத்தில், கடந்த 1ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருந்தது. அதனால் பரபரப்பாக திருமண வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதன்பெயரில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றும் சடங்கினை நடத்த தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத வகையில் மணமகள் வீட்டார் அந்த சடங்கை நிறுத்திகியுள்ளனர். மேலும், மணமகன் குடும்பத்தினர் அதிக அளவிலான வரதட்சணை கேட்டதாகக் கூறப்படுகிறது.

வரதட்சணை
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகளின் உறவினர்கள், மணமகனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பின்பு அது வாக்குவாதமாக மாறியதால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மணமேடையிலேயே வாய் தகராறு ஏற்பட்டது. சண்டை பெரிதாகி கைகலப்பு வரை நடந்துள்ளது.
மணப்பெண் ஆவேசம்
இதை எல்லாம் ஒரு கட்டம் வரை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்த மணமகள் ஆத்திரமடைந்தால் தனது திருமண அலங்கார உடையிலேயே கையில் மாலையுடன், குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு ஷாபூர் பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்றுவிட்டார்.
வழக்குப்பதிவு
அதிரடியாக காவல்துறையினரை அணுகிய மணப்பெண் வரதட்சணை கேட்பதாக மணமகன் குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் மணமகன் உள்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் பீதியடைந்த மணமகன் குடும்பத்தினர், தாங்கள் திருமணத்திற்கு தயாராகவில்லை என்று தெரிவித்தனர்.

விசாரணை
இதை சட்டப்பூர்வமாக சந்தித்துக் கொள்வதாக காவல்துறையினரிடம் உறுதியளித்து விட்டு சென்றனர். இந்நிலையில், இதற்கு வரதட்சனை தான் உண்மையான காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் இது போன்ற வரதட்சணை கொடுமைகளை சகித்து கொண்டு வாழ்கிறார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மணமகன் வீட்டாரை எதிர்த்து மணமகள் தைரியமாக காவல்நிலையத்திற்கு வந்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

