ஆதனூர் கிராமத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எலக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை அந்த கிராம ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரிக் ஆட்டோ
இந்தியாவில் அதிகரித்துவரும் காற்று மாசு காரணமாக சில நகரங்கள் மற்றும் தலைநகர்களில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இயங்கும் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பேட்டரி இருசக்கர வாகனங்கள் வரிசையில் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பேட்டரி ஆட்டோக்கள் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்ககூடிய வகையில் பேட்டரிகளை பெற்றுள்ளன. இந்த, எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
கிராம மக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகிலுள்ள ஆதனூர் என்னும் கிராமத்தில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளிக்கு மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் என பலர் வசித்து வருகின்றனர்.
வேலைக்கு செல்ல, பள்ளி கல்லூரிக்கு செல்ல, அவசரத்திற்கு மருத்துவனைக்கு செல்ல, இப்பகுதியில் தேவையான போக்குவரத்துக்கு வசதி இல்லை. பேருந்துகள் இருந்தாலும் குறைந்த அளவுக்கே இயக்கப்பட்டு வருவதால் ஆதனூர் கிராம மக்கள் போக்குவரத்திற்கு கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
பேட்டரி ஆட்டோ திட்டம்
ஊர் மக்கள் இவ்வாறு போக்குவரத்திற்கு சிரமப்படுவதை அறிந்த ஊராட்சி மன்ற நிர்வாகம், பொதுமக்கள் பயன்படும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் 7 பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டு, ஊர் பொதுமக்களின் போக்குவரத்திற்காக இந்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. காலையில் நான்கு மணி நேரமும் மாலையில் நான்கு மணி நேரமும் என ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இந்த பேட்டரி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிக்க பாஸ் அவசியம்
ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேட்டரி ஆட்டோக்களில் பயணிக்க ஆதார் அட்டை நகல் கொடுத்து பாஸ் பெறவேண்டியது கட்டாயம். மேலும், மது அருந்தியவர்கள் இந்த ஆட்டோவில் பயணிக்க அனுமதியில்லை என ஊராட்சி மன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி ஆட்டோ திட்டத்தால் ஆதனூர் கிராம மக்கள் பெருமளவில் பயன்பெற்றுள்ளதக தெரிவித்திருக்கின்றனர்.
பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களும் இந்த பேட்டரி ஆட்டோ திட்டத்தால் போக்குவரத்துக்கு தடங்கலின்றி சென்று வருவதாக கூறப்படுகிறது.