உத்திரபிரதேசத்தில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் பெண்ணாக பெற்றெடுத்ததால், அந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவர் வீட்டாரும் நடுரோட்டில் வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
இரண்டு பெண் குழந்தை
உத்திரபிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குஸ்மா. அவரது கணவர் பெயர் நீரஜ் பிரஜாப்தி. நீரஜ் பிரஜாப்திக்கும் குஸ்மாவுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதான பிரான்ஷி மற்றும் 2 வயதான ஆர்த்தி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆண் வாரிசு ஆசை
திருமணமாகி முதல் குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், முதல் குழந்தை பெண்ணாக பிறந்தது. மீண்டும் இரண்டாவது குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என நினைத்தனர். ஆனால், இவர்களின் ஆண் வாரிசு ஆசைக்கு மாறாக இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் நீரஜ் மற்றும் இவரது குடும்பத்தினரின் மொத்த கோபமும் குஸ்மா மீது திரும்பியது.
படிப்பு தேவையில்லை
ஆண் குழந்தையை ஏன் பெற்றுத்தரவில்லை? என கேட்டு நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் குஸ்மாவை பயங்கரமாக தாக்கியுள்ளனர். மேலும், கணவர் நீரஜ் பெண் ‘குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்க இயலாது’ என கூறி, பள்ளியில் படிப்பதற்கு தேவையான பணத்தையும் தர மறுத்திருக்கிறார். தன்னுடைய, வாழ்க்கை பிரச்னையில் குழந்தைகளின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என நினைத்த குஸ்மா, வேலைக்கு சென்று இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்திருக்கிறார். தனது, கணவர் நீரஜால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக பராமரித்தும் வந்திருக்கிறார் குஸ்மா.
பயங்கர தாக்குதல்
இந்நிலையில், மீண்டும் நீரஜ், அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து குஸ்மாவை நடுரோட்டில் கட்டிப்போட்டு கற்களை கொண்டும், தடித்த குச்சிகளை கொண்டும் குஸ்மா மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த குஸ்மா நடுரோட்டிலேயே மயங்கி விழுந்திருக்கிறார். குஸ்மா தாக்கப்பட்ட தகவலறிந்த குஸ்மாவின் தந்தை அலறிக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்.
போலீஸ் விசாரணை
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகளை தூக்கிக்கொண்டு குஸ்மாவின் அப்பா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு குஸ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட்டிருக்கிறது. தகவலறிந்த கொட்வாலி போலீசார் மருத்துவமனைக்கு சென்று குஸ்மாவை விசாரித்துள்ளனர். நடந்த எல்லா கொடுமைகளையும் குஸ்மா ஒன்று விடாமல் கூறியுள்ளார்.
கொலை வெறி
குஸ்மாவின் வாக்குமூலத்தை அடுத்து நீரஜ் உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது கொலை வெறி தாக்குதல் மேட்டரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எப்ஐஆரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடூர தாக்குதல் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஹோபா மாவட்ட எஸ்பி உறுதி அளித்துள்ளார்.
குஸ்மா தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாவதை அடுத்து, பெண்குழந்தைகளை இழிவாக நினைப்பதற்கும், இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை சட்டம் இயற்ற வேண்டும் என்று கருத்துகள் எழுந்துள்ளன.