யோகாசனம் என்பது நம் இந்திய நிலப்பரப்பு, இந்த உலகுக்கு அளித்த எண்ணற்ற கொடைகளில் ஒன்று. இன்று மேலை நாடுகளில் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிவிட்டது.
நம் முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த ஒப்பற்ற கலையையும் அவற்றில் உள்ள பல்வேறு ஆசனங்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.
இந்த யோகாசன கட்டுரை தொடரின் முதல் கட்டுரையாக வயிற்று கோளாறுகளை சரி செய்யும் பவன முக்தாசனம் பற்றி பார்க்கலாம்.
பவன முக்தாசனம்:
வயிற்றில் சுரக்கும் அதிக அமில சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் அல்சர், வயிற்று புற்று நோய் ஆகியவை வராமல் தடுக்கும். வாயு கோளாறுகளை போக்குவதால் புத்துணர்ச்சியை நாள் முழுவதும் அளிக்கிறது.
மலச்சிக்கல் செரியாமை, வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. உடல்., எடை, அதிக வயிற்று தசை ஆகியவற்றை குறைக்கிறது. மாரடைப்பு நோய், இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
நுரையீரலுக்கு வலிமையை ஊட்டி அதன் செயல்பாட்டினை அதிகரிக்கிறது. மூல வியாதி கோளாறுகள், இரத்தக் குடல் வால்வுக் கோளாறுகள், மூட்டுவலி, வயிற்றுவலி பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் ஆகியவற்றை போக்குகிறது.
பிரசவித்த பெண்களின் அடிவயிற்று பெருக்கத்தை குறைப்பதற்கு அர்த்த ஹலாசனம் செய்தவுடன் இந்த ஆசனத்தை செய்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்.
முதல் செய்முறை :
1. இந்த ஆசனத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து செய்ய வேண்டும்.
2. சவாசனத்திலிருந்து கால்களை ஒன்று சேர்க்கவும். வலது காலை உயர்த்தி மடித்து கால் முட்டியை வயிற்றை நோக்கிக் கொண்டு வரவேண்டும்.
3. கை விரல்களை ஒன்று சேர்த்து முட்டியை பிடித்து வயிற்றை நோக்கி அழுத்த வேண்டும்.
4. இடது காலை மடிக்காமல் தலையை உயர்த்தி எழுந்து முகவாய் கட்டையை வலது கால் முட்டியை நோக்கி கொண்டு வந்து சேர்க்கவும்.
5. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்து விட்டு தலை, கால்களை பிரித்து விரிப்பின் மீது படுக்கவும்.
6. மாற்று ஆசனமாக இடது காலை மடித்து முன்பு போல் செய்யவும்.
7. வலது இடது என மாற்றி மாற்றி மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திடல் ஓய்வு எடுக்கவும்.
இரண்டாம் செய்முறை :
1. இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டு வரவும்.
2. கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால்முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுத்து தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும்.
3. சாதாரண மூச்சில் 15 எண்ணிக்கை இருந்துவிட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கவேண்டும்.
4. மூன்று முறை செய்துவிட்டு சவாசனத்திற்கு வரவேண்டும்.
குறிப்புகள் :
1. சாதாரண மூச்சில் பழக வேண்டும். அப்படி முடியாதவர்கள் வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுத்து செய்யவும்.
2. கழுத்துவலி உள்ளவர்கள் தலையை உயர்த் தாது தரையின் மீது வைத்து கால்களை மட்டும் மடித்து அழுத்தம் கொடுத்து செய்யவேண்டும்.
அப்படி செய்து வந்தால் நாற்பது வயதிற்கு மேல் வரும் ‘லும்போ சேக்ரல்ஸ்பாண்டி லைடிஸ்’ மற்றும் ‘லும்போ எவர்டிலரே” எனும் அடிமுதுகு வலி (இடுப்பும் முதுகுத்தண்டும் சேரும் இடம்) குணமாகும்.