நீரிழிவு பிரச்சனை காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவரது தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆக்ஷன் ஹீரோ
தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா மீது கொண்ட காதலால் இளம் வயதிலேயே சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துவிட்டார். சண்டைக்காட்சிகளில் வில்லன்களை பந்தாடும் காட்சிகள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அதிலும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் விஜயகாந்த்.
புரட்சிக் கலைஞர்
விஜயகாந்த் தான் நடித்துள்ள படங்களில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருப்பார். 1980 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சங்கத் தலைவர் என்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்தார்.
அரசியல் பிரவேசம்
அரசியலில் கால் வைத்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் விஜயகாந்த். அரசியலில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருக்கிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
விரல்கள் அகற்றம்
இது குறித்து தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று 3 விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.