சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்து கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது .
ஈரோடு மாவட்டம்
ஈரோடு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் கடந்த வாரத்தில் 16 வயது சிறுமி தனது உறவினருடன் வந்து புகார் ஓன்று அளித்துள்ளார். புகாரில் தன் அம்மா இந்திராணியும்,
வளர்ப்பு தந்தை சையது அலி என்பவருடன் சேர்ந்து தன்னை கட்டாயமாக சினை முட்டை தானம் வழங்க வைத்து சித்திரவதை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்திராணி மற்றும் சையது அலி ஆகியோரை விசாரணை செய்ய மாவட்ட எஸ்.பி சசிமோகன் உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு
இது தொடர்பாக சூரம்பட்டி காவல் துறையினர் இந்திராணி மற்றும் சையது அலியை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிடமிருந்து கரு முட்டை எடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தது அதிர்ச்சியளித்தது. ஒரு கரு முட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாகவும் தொடர்ந்து சிறுமியிடம் மூன்று ஆண்டுகளில் 8 முறை கரு முட்டை எடுக்கப்பட்டது தெரிய வந்தது.
இதில் அதே பகுதியை சேர்ந்த பெண் மாலதி என்பவர் இடைத்தரகராக இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளனர். மேலும், ஆதார் அட்டையில் சிறுமியின் வயதை மாற்றி சட்டத்திற்கு புறம்பாக போலி ஆவணம் தயாரித்து கொடுத்தவர் உட்பட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் புகார்
தனக்கு 3 வயது இருக்கும்போதே அம்மா இந்திராணி அப்பா சரவணனை விட்டு பிரிந்து வந்து விட்டார். இப்போது தனது அம்மா சையது அலி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். சையது அலி என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தன்னை பல மருத்துவமனைக்கு அழைத்து சென்று கரு முட்டை விற்பனை செய்து வருவதாகவும் கூறினார். இதற்கு தனது அம்மாவும் உடந்தையா இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட மருத்துவக்குழுவினர்
இதனிடையே மருத்துவக்குழு அமைக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சேலத்திலும் கரு முட்டை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு நேற்று பகல் 3 மணி அளவில் மருத்துவத்துறை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் மருத்துவமனைக்குள் சென்று கரு முட்டை விற்பனை தொடர்பாக விசாரித்தனர்.
கடுமையான நடவடிக்கை
இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ஈரோட்டில் கருமுட்டை விற்ற வழக்கில் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் விசாரணை செய்து இருக்கிறோம். இதுபோல சேலத்தை அடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் விசாரணை செய்ய இருக்கிறோம்.
கரு முட்டை விவகாரத்தில் விதிமீறல் ஈடுபட்ட மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி அளித்த தகவல் பெயரில் தமிழகம் மட்டுமின்றி சில மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் விசாரணை நடத்தப்படும் என உயர்மட்ட மருத்துவக்குழுவின் துணை தலைவர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
நீலகிரி வழக்கறிஞர் விஜயன்
இது குறித்து நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் மக்கள் சட்ட மையத்தின் இயக்குனர் மூத்த வழக்கறிஞர் விஜயன் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அவர், ஈரோடு மட்டுமல்லாது கோவை சுற்றிவட்டாரம் முழுவதுமே இப்படியான கொடூரங்கள் நடந்தேறி வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 630 சம்பவங்கள் நடைபெறுகிறது. ஆனால் இதில் 10 சம்பவங்களுக்கு குறைவாக தான் வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இது தமிழ்நாடு முழுக்க நடப்பதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக ஏழை சிறுமிகள், இளம்பெண்களை குறிவைத்து பணத்தாசை காட்டி கரு முட்டையை எடுப்பதாகவும், இதற்கு பின்னால் மிக பெரிய கும்பலே இருப்பதாக கூறினார்.