கொரோனா பாதிப்பால் சிகிச்சையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மூச்சுக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்ற
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்பெயரில் தற்போது இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

ரத்த கசிவு
சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்திக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்த கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனால் 12ம் தேதி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சோனியா காந்தி உடல் நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பூஞ்சை தொற்று
அதில், ‘கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சோனியா காந்தியின் சுவாச பாதையில் பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன் சேர்த்து பூஞ்சை பாதிப்புக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவமனை அறிவிப்பு
இதனையடுத்து மருத்துவமனை தரப்பில், சோனியா காந்திக்கு ஏற்பட்ட பூஞ்சை பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர். இதனால் நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராக அவகாசம் வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தியிடம் 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

