அதிக பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் அதிமுக தலைமை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக தலைமை பிரச்சனை
அதிமுகவில் உட்கட்சி மோதல் வலுத்து வருகிறது. இரட்டை தலைமையாக உள்ள அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டுவர வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பு ஆதரவாளர்கள் கோஷங்களை முன்வைக்கின்றனர். அதிமுகவில் யார் பொதுச்செயலாளர் என்று இரு தரப்பை சேர்ந்தவர்கள் மாறி மாறி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் ட்விட்
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.பதிவில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கியிருப்பதாகவும் ஓ.பன்னீர் செல்வம் ஓரங்கட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
இதையடுத்து நேற்று நாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள் என டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘அதிமுக ஒரு வியாபார கம்பெனி, அதிமுகவில் யார் அதிக முதலீடு செய்தார்களோ அவர்களுக்கு தான் பொறுப்பு கொடுக்கப்படும். ஜனநாயகம் இருக்க கூடிய கட்சி அல்ல அதிமுக, அது ஒரு நாடக கம்பெனி. அதை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று கூறினார்.
அனைவரும் எதிர்க்கட்சி
பாஜக தான் எதிர்க்கட்சி என கூறிவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘பாஜக மட்டும் எதிர்க்கட்சி கிடையாது. ஆளும் கட்சியை எதிர்க்கும் அனைவருமே எதிர்க்கட்சி தான். மடியில் கனம் இருப்பதால் அதிமுக முறையான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஜெயலலிதா வழியில் நடத்தி வருகிறோம். தேர்தலுக்கு பின்னர் நாங்கள் இருக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால் நாங்கள் வளர்ந்து வருகிறோம்’ என நாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.