படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அடிப்படையில் ரசிகர்களின் மனநிலை தான் காரணம்.
ஆந்திர அரசு
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறை இங்கு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அதிலும் பெரிய நடிகர்களின் படம் வெளியானால் முதல் நாள் முதல் முதல் காட்சிக்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆந்திரா அரசு திரைப்பட டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த முடிவு செய்தது. அதன்படி அந்த மாநில அரசு திரையரங்கு டிக்கெட் விற்பனையை அரசு இணைய தளங்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அதை முழுமையாக நடைமுறை படுத்தும் முயற்சியில் ஆந்திர அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
விக்ரம் படம்
இதனிடையே அந்த நடைமுறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பளர்களும் தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஒரு பக்கம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதும் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திற்கும் சில இடங்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதிக கட்டணம்
இது தொடர்பாக திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திக் ரவிவர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, ‘தமிழ்நாட்டில் 1050 திரையரங்குகள் உள்ளது. ஆண்டுதோறும் 200 முதல் 250 வரை திரைப்படங்கள் வெளியாகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து திரையரங்குகளுமே 500, 1000 ரூபாய் டிக்கெட் வசூலிப்பதாக கூறுவது உண்மை இல்லை. பெரிய நடிகர்களின் படங்கள் வரும்போது மட்டுமே இது போன்ற முறைகேடுகள் நடக்கிறது. பெரிய நடிகர்களின் படங்கள் சுமார் 600 முதல் 700 திரையரங்குகளில் வெளியாகிறது.
முதல் நாள் முதல் காட்சி
பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் மட்டும் தான் இந்த அதிக கட்டணம் வசூலிக்கும் முறைகேடு நடக்கிறது. இதற்கு அடிப்படையில் தனக்கு பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் காட்சி தான் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் மனநிலை தான் காரணம்.
Paid Premiere
இதற்கு தீர்வு மேலை நாடுகளில் பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை ‘Paid Premiere’ என்ற பெயரில் 15 முதல் 25 டாலராக அதிகாரப் பூர்வமாகவே உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறையை தமிழகத்திலும் கொண்டு வந்தால் இத்தகைய முறைகேடுகள் குறையும். அரசுக்கும் வருமானம் கூடும்’ என்று கார்த்திக் ரவிவர்மா கூறுகிறார். மேலும், இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கார்த்திக்ரவிவர்மா கோரிக்கை வைத்துள்ளார்.