ஃபிட்னஸ்

முதுகுத்தண்டை பலப்படுத்தும் சேது பந்தாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

படுத்து செய்யும் ஆசனங்களில் எளிமையான, அதே நேரத்தில் மிகுந்த பலன்களைத் தரும் ஆசனங்களில் சேதுபந்தாசனமும் ஒன்று. வடமொழியில் ‘சேது’ என்பதற்கு ‘பாலம்’ என்றும் ‘பந்த’ என்பதற்கு ‘பிணைக்கப்பட்ட’ என்றும் பொருள்.

உள்புற அழுத்தம் மற்றும் வெளிப்புறம் இழுக்கும் ஆற்றலும் ஒரு பாலத்தை பலமாக வைக்க உதவுவது போல், சேதுபந்தாசனத்தில் வயிற்றுப் பகுதி அழுத்தம் பெறுவதோடு முதுகுத்தண்டு பகுதி நீட்சியடைந்து உடல் பலம் பெறுகிறது. சேதுபந்தாசனம் ஆங்கிலத்தில் Bridge Pose என்று அழைக்கப்படுகிறது.

சேதுபந்தாசனத்தில் மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இதன் காரணமாக, நிலையான தன்மை, படைப்பாற்றல், அன்பு ஆகியவை வளர்கின்றன.

setu bandhasana

பிரபஞ்ச ஆற்றலைக் கவரும் திறன் உருவாகிறது. தொடர்பாடல் திறனும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கின்றன.

சேதுபந்தாசனத்தின் மேலும் சில பலன்கள் :

முதுகுத்தண்டை நீட்சியடையச் செய்கிறது

முதுகுத் தசைகளைப் பலப்படுத்துகிறது

கழுத்து, மார்பு பகுதிகளை விரிக்கிறது

தைராய்டு சுரப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது

நுரையீரலைப் பலப்படுத்துகிறது

ஆஸ்துமா உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது

இருதய நலனைப் பாதுகாக்கிறது.

setu bandhasana yoga pose

அதிக இரத்த அழுத்தத்தை சரி செய்ய உதவுகிறது

இடுப்பின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது

வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது

அசீரணத்தைப் போக்குகிறது

தலைவலியைப் போக்க உதவுகிறது

மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உபாதைகளை போக்க உதவுகிறது

கால்களில் சோர்வைப் போக்குகிறது

உடல் சோர்வைப் போக்குகிறது

தூக்கமின்மையைப் போக்குகிறது

மன அழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது.

செய்முறை :

விரிப்பில் படுக்கவும்.

கால்களை மடக்கி இரண்டு பாதங்களையும் தரையில் வைக்கவும்.

கணுக்கால் முட்டிக்கு நேர் கீழே இருக்க வேண்டும்.

கைகள் நீட்டியிருக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுத்தவாறு பாதங்களையும் கைகளையும் தரையோடு அழுத்தி இடுப்பை மேல் நோக்கி உயர்த்தவும்.

setu bandhasana bridge pose

தோள்கள் விரிந்து இருக்க வேண்டும்.

கைகள் உடலின் அருகே இருக்கலாம்; அல்லது உடலின் கீழ் இரண்டு கைவிரல்களும் பிணைந்திருக்கலாம்.

ஒரு நிமிடம் இந்நிலையில் இருக்கவும்.

பின் இடுப்பைத் தரையில் வைத்து கால்களை நீட்டி ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு :

தோள் அல்லது கழுத்தில் தீவிர பிரச்சினை உள்ளவர்கள் சேதுபந்தாசனத்தைத் தவிர்க்கவும்.

இடுப்பை மேல் நோக்கி உயர்த்துவதில் சிரமம் இருந்தால் இடுப்பின் அடியில் Yoga Block அல்லது மடித்த கம்பளம் ஒன்றை வைத்துப் பழகவும்.

Related posts