பாதம் என்றால் கால். அங்குஸ்தா என்றால் கட்டை விரல். முன் குனிந்து கால் கட்டை விரல்களைப் பிடித்து வளைவது என்று இதற்குப் பொருள். பாதாங்குஸ்தாசனம் Big Toe Pose என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
பாதாங்குஸ்தாசனத்தில் கால் கட்டை விரலைப் பிடித்துக் குனிவதால் கட்டை விரலை இழுத்துத்தான் நன்றாக முன் குனிய முடியும். உத்தானாசனத்தில் முன் குனிவதால் உண்டாகும் அனைத்துப் பலன்களும் இதற்கும் உண்டு. கூடுதலாக, கட்டை விரலை பிடித்து அழுத்துவதால் சில பலன்கள் சிறப்பாக இந்த ஆசனத்திற்கு கூடுகிறது.
நம் உடலில் ஓடுகின்ற 10 வாயுக்களில் ஒன்றான அபான வாயு தொப்புளுக்குக் கீழிருந்து கால் கட்டை விரல் வரை செல்கிறது. இதுதான் நமது அடி வயிற்று இயக்கங்களை, அதாவது, சிறுநீர், மலம் போன்ற இயக்கங்களை செழுமைப்படுத்துகிறது. இந்த வாயு மேல் நோக்கி ஓடக் கூடாது. அப்படி ஓடினால் வயிற்று உபாதைகள், வாய்வு, மார்பு வலி என பல தொல்லைகள் ஏற்படும்.
அப்படி அந்த அபான வாயுவை மேல் நோக்காமல் அதன் சரியான திசை வழியில், அதாவது, தொப்புளுக்குக் கீழிருந்து கட்டை விரல் வரை ஓடச் செய்வது இந்த ஆசனத்தின் சிறப்பாகும். ஒரு வேளை மேல் நோக்கி ஓடியிருந்தாலும் அதை சரி செய்து சீராக்கி விடும் பாதாங்குஸ்தாசனம்.
மேலும், கட்டை விரலின் இரண்டு பக்கங்களிலிருந்தும் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்ட பாதைகள் செல்கின்றன. கட்டை விரல் அழுந்துவதால் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டப் பாதைகள் செழுமையாக இயங்குகிறது. கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது இந்த ஆசனம்.
பாதாங்குஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள் :
மேலே குறிப்பிட்டிருப்பது போல் கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாடுகளை செம்மைப்படுத்துகிறது.
முதுகெலும்பை பலப்படுத்துகிறது.
நுரையீரலை பலப்படுத்துகிறது.
மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது; நினைவாற்றலை வளர்க்கிறது.
மேல் முதுகுத் தசைகளை தளர்த்தி மேல் முதுகு வலியை போக்குகிறது.
கழுத்து தொடங்கி ஆடுசதைகள் வரை நீட்சியடைய (Stretch) வைக்கிறது.
வயிற்று கோளாறுகளை சரி செய்கிறது.
சையாடிக் பிரச்சினையை போக்குகிறது.
லேசான தலைவலியை போக்க உதவுகிறது.
எலும்புகளை பலப்படுத்துகிறது.
தூக்கமின்மையை சரி செய்கிறது.
மனதை அமைதிப்படுத்துகிறது.
செய்முறை :
இரண்டு பாதங்களுக்கிடையே சிறிது இடைவெளி விட்டுநேராக நிற்கவும்.
மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்னால் குனிந்து கால் பெருவிரல்களை பிடிக்கவும்.
20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் பழைய நிலைக்கு வரவும்.
குறிப்பு :
முதுகுத் தசைகளை பலப்படுத்தும் ஆசனமாக இது விளங்கினாலும் தீவிர முதுகுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.