தமிழ்நாடுமருத்துவம்

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றில் பொருட்களை வைத்து தைத்த மருத்துவர்!

கடலூரில் கர்ப்பபை கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு தேவையான துணி, இரும்பு, ஊசி போன்றவற்றை வைத்து தைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பபையில் கட்டி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதிக்கு அருகேயுள்ள மாதர் சூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருக்கு 36 வயதாகிறது. கலைச்செல்வி கடந்த 6 மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால், காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் சாலையில் உள்ள ஏ.கே. செந்தில்குமார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு கலைச்செல்வியை பரிசோதித்த மருத்துவர் செந்தில்குமார், கர்ப்ப பையில் நீர்க்கட்டி உள்ளது எனவும், நீர்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து, கலைசெல்விக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

Injection

அடிக்கடி வயிற்றுவலி

அறுவை சிகிச்சைக்கு பிறகும் அடிக்கடி கலைச்செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். பின்னர், கலைச்செல்வி கள்ளக்குறிச்சியில் தனது உறவினர் வீட்டில் தங்கி வந்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட கடுமையான வயிற்றுவலியால் கலைச்செல்வியை உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றிருக்கின்றனர்.

மர்ம பொருட்கள்

கலைச்செல்விக்கு சிகிச்சையளித்து பரிசோதித்த மருத்துவர்கள் கலைச்செல்வியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்திருக்கின்றனர். அப்போது, கலைச்செல்வியின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் துணி, நூல், இரும்பு துண்டு, மற்றும் ஊசி ஆகிய பொருட்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

scan

புகார்

கலைச்செல்வியும் அவருடைய உறவினர்களும் ஏ.கே. செந்தில்குமார் மருத்துவமனைக்கு சென்று முறையிடும்போது, தாங்களே செய்த தவறை சரி செய்து அறுவை சிகிச்சை செய்கிறோம் என ஏ.கே. செந்தில்குமார் மருத்துவ நிர்வாகம் கூறியிருக்கிறது. ஆனால், பயந்துபோன கலைச்செல்வி இந்த முறையும் உங்களை நம்பி வந்தால் என் உயிர் போய்விடும் என பயந்து அந்த இடத்தை விட்டு சென்றிருக்கிறார்.

தனக்கு நடந்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக கலைச்செல்வி காட்டுமன்னார் கோவிலிலுள்ள ஏ.கே. செந்தில்குமார் மருத்துவமனையில் முறையிட்டிருக்கிறார். அவர்களின் பதில் தெளிவாக இல்லாமல் முரணாக இருந்திருக்கின்றது. எனவே, விரக்தியடைந்த கலைச்செல்வி காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்திற்கு சென்று ஏ.கே. செந்தில்குமார் மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார். இந்த தவறான அறுவைசிகிச்சை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட கலைச்செல்வி பெருமளவில் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதோடு, இச்சம்பவம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts