சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகன சோதனை
சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் காவலர்களின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கியும் இருந்தது.
![]()
துப்பாக்கி
இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்கள், பாதி நிலையில் செய்த பெரிய துப்பாக்கி, முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அந்த இளைஞர்கள் வைத்துள்ளதாக காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. காவல்துறையினர் அந்த இளைஞர்களையும் கைது செய்து இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
கியூ பிரிவு காவல்துறை
மேலும், அந்த இரண்டு நபர்கள் சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் என்றும் இருவரும் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே கியூ பிரிவு காவல்துறையினரும் தனியாக விசாரணை செய்தனர். அதில் சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி என்றும் நவீன் சக்கரவர்த்தி பி.சி.ஏ பட்டதாரி என்றும் தெரிய வந்துள்ளது.
இயற்கை ஆர்வலர்கள்
மேலும், தாங்கள் ஒரு இயற்கை ஆர்வலர்கள் பறவைகளை பாதுகாப்பதற்காகவும் பொது மக்களை பாதுகாக்கவும் யூடியூப் சேனல் மூலம் துப்பாக்கி செய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டு துப்பாக்கிகளை செய்வதாக கூறியுள்ளனர். இவர்கள் சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி என்ற ஒரு வனப்பகுதி அருகில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு துப்பாக்கி செய்தது தெரியவந்தது.

விசாரணை
துப்பாக்கியை விற்பனை செய்யும் திட்டம் உள்ளதா, ஏதாவது சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா, துப்பாக்கி நிதி உதவிகள் செய்தது யார், இவர்களுக்கு ஏதாவது தீவிரவாத அமைப்பு ஆரம்பிக்க போகிறார்களா என்பது போன்ற கேள்விகளை கியூ பிரிவு போலீசார் சார்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
