குஜராத்தில் ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெறும் என்று மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய கல்வி கொள்கை
நாடு முழுவதும் மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி அளவில் உள்ள பாட திட்டங்களை இந்திய அளவில் ஒரே கல்வியாக மாற்றவும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என மத்திய அரசு அறிவித்திருந்தது.
கல்வி அமைச்சர்கள் மாநாடு
இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது மற்றும் வேறு பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து இன்று மற்றும் நாளை குஜராத்தில் மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள கல்வி அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக கல்வி அமைச்சர்கள்
ஆனால் இதில் தமிழக பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை. அதேபோல் தமிழக பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறைக்கான அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
முரண்பாடு
ஏற்கனவே புதிய கல்வி கொள்கை அமல்படுவது குறித்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. அனைவரும் புதிய கல்வி கொள்கையை குறித்து முழுமையாக படிக்கவேண்டும். ஒருசிலர் இது குறித்து படிக்காமல் தவறாக பேசியும் சிலர் எதிர்ப்பதாகவும் தமிழக ஆளுநர் விமர்ச்சித்துள்ளார்.
உயர்கல்வி துறை அமைச்சர்
இதற்கு பதில் கூறிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ‘புதிய கல்விக்கொள்கையை நாங்கள் படித்துவிட்டுத்தான் எதிர்த்து பேசிவருகிறோம். புதிய கல்விக்கொள்கை என்பது சமூகத்திற்கு பலனளிக்காத ஒரு குலக்கல்வி திட்டம். அவை தமிழ்நாட்டிற்கு தேவையில்லை’ என அமைச்சர் பொன்முடி பதில் கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில் குஜராத்தில் நடக்கும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகத்தில் திமுக மற்றும் ஆளுநர் இடையே என்ன மாதிரியான போக்கை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.