ஃபிட்னஸ்

முதுகுத்தண்டைப் பலப்படுத்தும் பரத்வாஜாசனம்! – ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசன பயிற்சி

பரத்வாஜாசனம் என்னும் ஆசனம் பரத்வாஜ முனிவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

அமர்ந்த நிலையில் செய்யப்படும் ஆசனமான பரத்வாஜாசனம் மூலாதாரம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்களைத் தூண்டுகிறது. மூலாதாரச் சக்கரத்தின் சீரான இயக்கம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

அனாகதம் எனப்படும் இருதயச் சக்கரத்தின் சீரான செயல்பாட்டினால் அன்பு, காதல், கருணை போன்ற உணர்வுகள் மனதை நிறைக்கின்றன.

பரத்வாஜாசனத்தின் மேலும் சில பலன்கள் :

முதுகுத்தண்டின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதோடு முதுகுத்தண்டை பலப்படுத்தவும் செய்கிறது.

வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

baradwajasana

தோள், இடுப்பு, முட்டி, கணுக்கால் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.

மேல் மற்றும் நடு முதுகு வலியைப் போக்க உதவுகிறது.

சையாடிக் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது.

செய்முறை :

விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.

வலது காலை மடித்து வலது பாதத்தை வலது தொடையின் வெளிப்பக்கமாகத் தரையில் வைக்கவும்.

இடது காலை மடித்து இடது பாதத்தை வலது தொடையின் மீது இடுப்பின் அருகே வைக்கவும்.

உங்கள் மேல் உடலை இடது பக்கமாகத் திருப்பவும்.

baradwajasana yoga pose

உங்கள் இடது கையை முதுகுக்குப் பின்னால் கொண்டு சென்று வலது பக்கமாகக் கொண்டு வந்து உங்களின் இடது கால் விரல்களைப் பற்றிக் கொள்ளவும்.

தலையை இடதுப்பக்கமாகத் திருப்பவும்.

வலது கையை இடது முட்டியின் மீது வைக்கவும்.

30 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் காலை மாற்றி இதைத் திரும்பவும் செய்யவும்.

குறிப்பு :

அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.

தீவிரமான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.

Related posts