தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா திருமண விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா, விக்னேஷ் சிவன்
கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த பிரபல நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் திரைக்கு வந்ததும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இருவருக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியானது.
திருமண அழைப்பிதழ்
அதை உறுதிப்படுத்தும் வகையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதில் சென்னை மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் திருமண விழா நடைபெற்றது.
பிரமாண்ட மாளிகை
நேற்று முன்தினம் மாலை மெஹந்தி விழாவுடன், கோலாகலமாக தொடங்கியது திருமண விழா. திருமணத்துக்காக பிரமாண்டமான கண்ணாடி மாளிகை அரங்கு அமைக்கப்பட்டது. அந்த மாளிகையில் இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நயன்தாரவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பிரபலங்கள் வருகை
திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அதன்பெயரில் இன்று நடந்த திருமணவிழாவில், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அட்லி, நெல்சன், பொன்வண்ணன் மற்றும் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சரத்குமார், விஜய் சேதுபதி, கேரள நடிகர் திலீப் போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் வருகை
இந்நிலையில், ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சென்னைக்கு வந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கும் ஹிந்தி படமான ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இதனால் நயன்தாரா திருமண விழாவிற்கு ஷாருக்கான் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.