தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன் முதலில் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் 2005ம் ஆண்டில் திருடப்பட்டது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.
முதல் தமிழ் பைபிள்
தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2005ம் ஆண்டில் அந்தப் புத்தகம் காணாமல் போனது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு புத்தக சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

ஸீகன்பால்க் பாதிரியார்
தற்போதைய ஜெர்மனியில் உள்ள சாக்ஸோனியில் பிறந்தவர் ஸீகன்பால்க். இவர் 1706ம் ஆண்டு செப்டம்பரில் தற்போதைய மயிலாடுதுறை அடுத்த தரங்கம்பாடிக்கு வந்துள்ளார். பின்னர் அங்கு ஓர் அச்சகத்தை நிறுவிய அவர் தமிழ் மொழி, இந்திய மதம், பண்பாடுகள் குறித்த ஆய்வு செய்து புத்தகங்களாக வெளியிட்டார். அப்போது அவர் கிருத்துவ வேதபுத்தகமான புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்நிலையில், பாதிரியார்களில் ஒருவரான ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சாவூரின் அரசராக இருந்த துளசி ராஜா சரபோஜியிடம் இதன் பிரதி ஒன்றைக் பரிசாக கொடுத்திருக்கிறார். இந்தப் பிரதி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் இருந்த சரஸ்வதி மஹால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
திருடப்பட்ட பைபிள்
பின்னர் 2005ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த பைபிள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சரபோஜி அரண்மனையின் துணை நிர்வாகி தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் பல கோணங்களில் வழக்கு குறித்து விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது.
விசாரணை
இதன்பிறகு, 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் குற்ற புலனாய்வு துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. சரஸ்வதி மஹாலின் பார்வையாளர்கள் வருகை பதிவேட்டை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். 2005ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி சில வெளிநாட்டவர் வந்திருப்பதாக அறிந்தனர். அவர்கள் ஸீகன்பால்க் தொடர்பான விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இங்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்கள், புத்தக சேகரிப்பாளர்களின் இணையதளங்கள், ஸீகன்பால்க் தொடர்புடைய அமைப்புகளின் இணையதள பக்கங்களில் ஆராயப்பட்டு வந்தன.

லண்டனில் கண்டுபிடிப்பு
பல வருடங்களாக நடந்த ஆய்வுக்குப் பிறகு லண்டனில் உள்ள மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இந்த பைபிள் இருப்பது கண்டறியப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. காணாமல் போன பைபிளின் படத்தை வைத்துப் பார்த்தபோது, மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சேகரிப்பில் இருந்த பைபிளும் இதுவும் ஒன்று எனத் தெரியவந்ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது. இந்த பைபிளில் சரபோஜி ராஜாவின் கையெழுத்து இருந்ததையும் பார்க்க முடிகிறது என தெரிவித்தனர்.
மீட்கப்படும் பைபிள்
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல் போன பைபிள் அதுதான் என உறுதிசெய்யப்பட்டதாகவும் விரைவிலேயே யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் அந்த பைபிள் மீட்கப்பட்டு, சரஸ்வதி மகாலில் வைக்கப்படுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது. தற்போது வேதபுத்தகத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.

