அரசியல்இந்தியா

சிவசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே !

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே.

அதிருப்தி எம்எல்ஏக்கள்

மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான ஆட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க கோரி சுமார் 50 அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு.

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே

உச்ச நீதிமன்றம்

இதற்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்ஸுக்கு பதில் மனு தாக்கல் செய்ய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஜூலை 11ம் தேதி மாலை வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

ஏக்நாத் ஷிண்டே அரசு

இதனையடுத்து உடனடியாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. இதன்தொடர்ச்சியாக அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. மேலும், பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏக்கள்

கட்சியிலிருந்து நீக்கம்

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி மகாராஷ்டிராவின் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் உத்தவ் தாக்ரே. இதற்கு பதிலளித்துள்ள ஏக்நாத் ஷிண்டே, ‘நான் தான் சிவசேனா கட்சியின் தலைவர். உத்தவ் தாக்கரேவின் அணி சிறுபான்மையாகிவிட்டது’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், வரும் 3, 4ம் தேதிகளில் சட்டப்பேரவை கூடுகிறது. மேலும் வரும் 4ம் தேதி சட்டப்பேரவையில் புதிய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts