தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஏ. சேர்மராஜன் தேசிய போலீஸ் அகாடமியின் புதிய இயக்குனராக பதவி ஏற்றார்.
சேர்மராஜன் ஐ.பி.எஸ்
தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே. அய்யாசாமி மற்றும் ரத்தினம்மாள் தம்பதியின் மூத்த மகன் ஏ.சேர்மராஜன் என்ற ஏ.எஸ். ராஜன். இவர் தனது பள்ளி படிப்புகளை தேனியில் படித்து முடித்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் ஹாதியா கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்தார் சேர்மராஜன். பின்னர் மதுரை தனியார் கல்லூரியில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
பீகார் மாநிலம்
மேலும், சேர்மராஜன் 1987ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐ.பி.எஸ் மற்றும் பீகார் கேடர் ஒதுக்கப்பட்ட சேர்மராஜன், பிரிக்கப்படாத அப்போதைய பீகாரில் உள்ள ராஞ்சியில் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார். அங்கு அவர் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தது பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், சில காலங்களில் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் எஸ்.பி யாக நியமிக்கப்பட்டார்.
தீவிர நடவடிக்கை
அப்போது பீகாரில் கொள்ளையர்கள், ரவுடிகளின் ஆதிக்கம் நிறைந்த பல மாவட்டங்களில் என்கவுண்டர் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கொள்ளையர்கள், ரவுடிககளை அடக்கி ஒடுக்கினார். மேலும், மத்திய உளவுதுறையில் சிறப்பு ஐ.பி யாக டெல்லி, குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார்.
உளவுத்துறையில் சிறப்பு இயக்குனராக பணியாற்றி வந்த ஏ.சேர்மராஜன், தற்போது ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியின் (SVPNPA) இயக்குனராக பதவி ஏற்றுள்ளார்.
ஏ. சேர்மராஜன் ஐ.பி.எஸ் பேச்சு
இதுகுறித்து ஏ. சேர்மராஜன் கூறுகையில், ‘காவல்துறையினர் தனது இன்ப துன்பங்களை சகித்துக்கொண்டு இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்காக நாள்தோறும் உழைத்து வருகின்றனர். புதிய தொழில்நுட்பத்தால் கொலை, குற்றங்கள் அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சியில் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ட்ரோன்களைப் பயன்படுத்தி ஆயுதங்கள் கூட திரட்டப்படுகின்றன. இத்தகைய சவால்களைச் சமாளிக்க, காவல்துறை அதிகாரிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் சர்வதேச தரத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமி மற்றும் பயிற்சியை சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதே எனது செயல்பாடுகளாக இருக்கும்’ என ஏ. சேர்மராஜன் தெரிவித்துள்ளார்.