இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் போல ஆன்மிக வளர்ச்சியும் தேவை என சென்னையில் நடந்த விழா ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.
ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவது அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறது. புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்டவை தொடர்பான அவரது கருத்துக்கு தமிழக அரசு தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் சித்தாந்தங்களை தனது பேச்சின் மூலம் அவர் பொதுவெளியில் கொண்டு செல்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்படுகின்றன.
சென்னையில் நிகழ்ச்சி
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற மத நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர், ‘வேற்றுமையில் ஒற்றுமை என இந்திய நாட்டை கூறுகிறோம். சனாதன தர்மமும் அதே தான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அடைவது அவசியம். ஆன்மிகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி ஆகும்’ என கூறினார்.
ஆன்மீக பூமி
இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த ஆர்.என்.ரவி, ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆள்கிறது என்றார்.
மேலும், சோம்நாத் கோவில் சொத்துக்களை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கியதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்று பேசினார்.
தமிழகத்தில் சனாதனம்
சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் பேசி வரும் நிலையில், ஆளுநரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மண்ணில் சனாதன உணர்வை வளர்த்து, மத உணர்வைத் தூண்டி, மதத்தின் பெயரால் சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாக விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.