தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 9.8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும்.
இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், 90.07 சதவிதத்துனர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம்
தமிழில் 94.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 90.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி துர்கா
இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி துர்கா தமிழ்மொழி பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றார். இது குறித்து மாணவி கூறுகையில், தமிழல் மொழியில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள், குடும்பத்தினர் உடன் படித்த நண்பர்கள் அனைவரும் ஊக்கப்படுத்தினார்கள். தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக மாணவி துர்கா தெரிவித்தார். இந்த மாணவியின் தந்தை ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி துர்காவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.