அரசியல்தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் – கே .சி. வீரமணி !

எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவிற்கு தலைமை ஏற்க வேண்டும் என திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணி பேசியுள்ளார்.

 மாவட்ட கூட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுகவில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையேற்றார்.

திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி. வீரமணி

இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரித்துறை அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு 

கூட்டம் முடிந்தபின்பு கே சி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், ‘திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாக எடப்பாடி பழனிசாமி ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மேலும், அதிமுகவை பிளவுபடுத்தி பார்க்க திமுக நினைக்கிறது. அதற்காக தொந்தரவு கொடுத்து பின்னிருந்து செயல்படுகிறது. அது எந்த ஒரு காலத்திலும் நடக்காது.

thirupattur admk

எடப்பாடி பழனிசாமி தலைமை

அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பார். தற்பொழுது அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம் ஏற்பட்டுள்ளது. இரட்டை தலைமை இருந்தால் ஒருவர் முடிவை மற்றொருவர் ஏற்கமாட்டார். அது எதிரிகளுக்கு சாதகமாக மாறிவிடும். இதற்கு ஒற்றை தலைமை அவசியம். மேலும், புகழேந்தியை கட்சியில் சேர்த்து தொண்டர்களின் வெறுப்பை பெற்றுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மகனும் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக நல்லாட்சி நடத்துகிறது எனக் கூறுகிறார்.

edappadi palanisamy

பின்புலத்தில் மன்னார்குடி குடும்பம்

ஓ.பன்னீர்செல்வம் எத்தனை உயர்மட்ட குழு அமைத்தாலும் எடப்பாடியார் தான் தலைமைக்கு வரவேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பின்புலத்தில் மன்னார்குடி குடும்பம் உள்ளது. மேலும் தமிழக முழுவதும் உள்ள அதிமுகவினர் 99% சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு தெரிவிக்கின்றனர்’ என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சம்பத்குமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related posts