தமிழகத்தில் BA5 வகை ஓமைக்ரான் கொரோனா தொற்று பரவியுள்ளது. இதுவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா
கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 16,701 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதிக பரவல்
முக்கியமாக சென்னை 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,62,975 ஆக அதிகரித்துள்ளது. இதில், 322 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது 4,366 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
BA5 வகை ஒமைக்ரான்
இந்நிலையில், தமிழகத்தில் BA5 வகை ஒமைக்ரான் பாதிப்பு 4 % – 25 % வரை தற்போது பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை பல்வேறு ஆய்வுகளையும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தி வருகிறது.
சென்னை சுற்றுவட்டாரம்
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளில் நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா மூன்றாவது அலையில் நோய் பரவல் அதிகமாக காரணமாக அமைந்த ஒமைக்ரான் வகை பாதிப்புகள் தற்போது உருமாற்றம் அடைந்துள்ளது. ஒமைக்ரான் 8 வகையான உருமாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மரபணு பகுப்பாய்வு பரிசோதனை
மேலும், தமிழகத்தில் BA5 ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று 25 சதவிதம் பரவியுள்ளது. இதுவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ காரணம் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மருத்துவக்குழு அமைக்கபட்டு தொற்று பரவல் கண்டறியவும், மரபணு பகுப்பாய்வு பரிசோதனை அதிகப்படுத்தவும் சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தலே தற்போது பரவிவரும் BA5 வகை ஓமைக்ரான் கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுரை வழங்கியுள்ளார்.