நாமக்கல் அருகே 10 வயது சிறுமியை கடத்தி சென்ற மர்ம கும்பல். இரவு பகலாக போலீஸ் தேடுதல் பணியில் ஈடுபட்டு சிறுமியை மீட்டனர். கடனை திருப்பி கேட்டதால் சிறுமி கடத்திய சம்பவம் நாமக்கல்லையே உலுக்கியுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய வன்முறைகளும், வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளது. சில சம்பவங்கள் மொத்த தமிழ்நாட்டையே உலுக்கியது. அதிலும் குறிப்பாக விருதுநகரில் இளம்பெண்ணுக்கு நடந்த வன்கொடுமை நினைத்து தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் கண்ணீர் சிந்தினர்.
காளிசெட்டிப்பட்டி கிராமம்
நாமக்கல் மாவட்டம் துறையூர் அருகில் காளிசெட்டிப்பட்டி எனும் கிராமத்தில் வசிப்பவர்கள் லாரி ஓட்டுநர் சரவணன் (34) அவரது மனைவி கௌசல்யா(29). இந்த தம்பதியருக்கு 2 பெண்குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு சரவணன் குடும்பத்தோடு மொட்டைமாடியில் தூங்கியுள்ளார்.
நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள், கத்திமுனையில் பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளையும் கட்டிப்போட்டு விட்டு, இளைய மகளை கடத்தி சென்றனர். இதுகுறித்து அவர்கள் எருமைப்பட்டி காவல் துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர்
இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் சரவணனன், கௌசல்யா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பெயரில் 6 தனிப்படை அமைத்து குழந்தையை தேடினர். அந்த சமயத்தில் கடத்தல்காரர்கள் சுமார் 50 லட்சம் பணம் கேட்டு மிரடல் விடுத்தனர்.
சிறுமி கண்டுபிடிப்பு
இந்நிலையில், குழந்தை அலங்காநத்தம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் முன் மீட்கப்பட்டது. அக்குழந்தையிடம் மர்ம நபர்களின் அடையாளம் கேட்டபோது, அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி முத்துமணி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும், மணிகண்டனையும், முத்துமணியையும் கைது செய்தனர். விசாரணையில் மணிகண்டன் தனது உறவினரான சரவணனிடம் கடன் பெற்றதாகவும். அதை திருப்பி தரவில்லை என சரவணனும் அவரது மனைவி கௌசல்யாவும் திட்டியதால் தான் சிறுமியை கடத்தினோம் என்று வாக்குமூலம் கொடுத்தனர்.
கடனை கேட்டு திட்டியதால் சிறுமியை கடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.