ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடிவருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு
நாமக்கல் நகரில், திருச்சி சாலையில் உள்ள ஜெய்நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் குமரேசன் (48). இந்நிலையில், இவர் கடந்த 18ம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, நள்ளிரவு வீடு திரும்பியதாகச் கூறப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் டு திருச்சி செல்லும் சாலையில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டடம் பகுதியில் அவர் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்த மர்மநபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளார். குமரேசனின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரேசன் இறந்ததாக தெரியவருகிறது. இந்த கொலை சம்பவம் குறித்து அவரின் மனைவி துர்கா நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உத்தரவின்பேரில், நாமக்கல் டி.எஸ்.பி சுரேஷ் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கொலையாளி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவரை நெருங்கி உள்ள தனிப்படையினர் விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டால் மட்டுமே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாமக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

