அரசியல்இந்தியாதமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் – மத்திய அமைச்சரை சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன் குழு !

மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக அனைத்து கட்சி குழுவினர் இன்று சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

மேகதாது அணை விவகாரம்

தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காவேரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முன்னெடுப்புகள் செய்து வருகிறது. மேலும், காவேரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், நடைபெற இருக்கும் காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என வலியுறுத்தி இருந்தார்.

mekedatu dam issue

கூட்டம் ஒத்திவைப்பு

எனினும், மேகதாது அணை விவகாரம் குறித்து கட்டாயம் விவாதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், அடுத்த மாதம் ஜூலை 6ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

அனைத்து கட்சி குழுவினர்

இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, தமிழக அனைத்து கட்சி குழுவினர் இன்று பிற்பகல் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சந்திக்க உள்ளனர். இந்த குழுவில் அதிமுக சார்பாக தம்பிதுரை, பாஜக சார்பாக நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பாக வைகோ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். அப்போது மனுவில் மேகதாதுவில் கர்நாடக அரசை அணை கட்ட அனுமதி வழங்க கூடாது. கர்நாடகா அரசின் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கஜேந்திர சிங் செகாவத்

Related posts