தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாதமொருமுறை மின்கணக்கீடு செய்யும் முறை கொண்டு வரப்படும் என வாக்குறுதி எண் 221-இல் சொன்னீங்களே, செஞ்சீங்களா.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே? “தொட்டாலே ஷாக்கடிக்கும் மின்கட்டணம்” என எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது மின்கட்டண உயர்வைக் கண்டித்து போர்க்கொடி தூக்கிய திமுக, ஆளுங்கட்சியாக அரியணை ஏறிய பிறகு அடுக்கடுக்காக மின் கட்டணத்தை உயர்த்தியதோடு, மக்களின் மின்கட்டணச் சுமையைக் குறைக்கும் மாதமொருமுறை மின்கணக்கீடு என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதியையும் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் போட்டுவிட்டது.
மேலும், மத்திய அரசு ஒதுக்கிய ஸ்மார்ட் மீட்டர்களையும் பொறுத்தாமல், மத்திய அரசின் சூரிய மின் திட்டங்களையும் செயல்படுத்தாமல், தமிழகத்தின் தற்சார்பு மின் உற்பத்தியையும் பெருக்காமல், தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கடன் வாங்கி, அந்த நிதிச்சுமையையும் மக்கள் தோள் மீதே ஏற்றி வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, இதுவரை நடைமுறையில் இருந்த இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கீடு என்ற முறையையும் சரிவர செயல்படுத்தாமல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேர்மைதான் திமுகவிடம் இல்லையென்று பார்த்தால், ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதைச் சரியாகப் பின்பற்றும் திறமையும் இல்லை என்பதற்கான சான்று தான் இது. இவ்வாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

