தமிழகத்தின் அனைத்து மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா
இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதித்து 3000 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும், நேற்று சென்னை 295 பேருக்கும் , செங்கல்பட்டு 122 பேருக்கும் , கோயம்புத்தூர் 98 பேருக்கும், திருவள்ளூர் 140 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
அறிவுரை
மேலும், முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற ஏற்கனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார்
இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக 100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் இன்று கடிதம் எழுதியுள்ளார். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்
செய்தியாளர் சந்திப்பு
முன்னதாக, நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 4 சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது. எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது’ என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.